Wednesday, June 27, 2012

 ’’ பிரதோஷம் - சில புராண செய்திகள் ’’.

  தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே அடிக்கடி போர் நடந்து வந்தது. அசுரகளால் அழிவு வராமலிருக்க தேவர்களும் - தேவர்களால் மரணம் வரக்கூடாது என அசுரர்களும் விடுத்த கோரிக்கையைக் கேட்ட ஸ்ரீமந் நாராயணன், “ பாற்கடலை கடைந்து அமிர்தத்தை எடுங்கள். அந்த
அமுதத்தை பருகினால் அழிவே கிடையாது ‘ என்றார்.   

      மந்தர மலையை மத்தாகவும் 
          திருமால்  ஆமையாகவும்
             வாசுகி பாம்பைக் கயிறாகவும் கொண்டு
தேவர்களும் அசுரர்களும் பாற் கடலைக் கடைய…… 
           வலி தாளாத வாசுகி பாம்பு கக்கிய விஷத்தை
                      ஈசன் எடுத்து   விழுங்க  … 
                           பார்வதி அதைக் கண்டத்திலேயே நிறுத்த,
           சிவன் விடமுண்டு நீலகண்டர் என்ற காரணப் பெயர் பெற்றார். 
               இதனைத் திருஞானசம்பந்தர் தேவாரத்தில்…,

        ” நாகம் கயிறாக நளிர்வரை அதற்கு மத்தாகப்
        பாகம் தேவ ரோடசுரர் படுகடல் அளறெழக் கடைய
        வேக நஞ்செழ ஆங்கே வெருவொடும் இரிந்தெங்கும் ஓட
        ஆகந் தன்னில் வைத்தமிர்தம் ஆக்குவித்தான் மறைக்காடே ---”    - என்கிறார்.

பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடைந்த போது முதன் முதலில் இரும்புச் சக்தி வெளியானது. 
இரும்புச் சக்திதான் மாகலெட்சுமி.
மாகலெட்சுமி கருமை நிறமாகக் காட்சி அளித்தாள்.
அதுவே கார்பனாகிய இரும்புச் சக்தி. 
இதிலிருந்து செம்பும், சொர்ணம், வைரம் வெளியானது. 
மகாலெட்சுமி என்ற இரும்புச் சக்தியைக் காப்பாற்றவே விஷ்ணு வந்தார். உலகின் ஒப்பற்ற சக்தியான இரும்புச் சக்தி.

        பாற்கடலில் பிறந்த பாவையான மகாலெட்சுமி
        கருநெய்தல் பூவால் புனைந்த மாலை ஏந்தி,
        உவந்து திருமாலுக்குச் சூட்டி அவனைத் தழுவினாள்
                 --- இச்செய்தி செவ்வை சூடுவார் பாகவதத்தில் இடம் பெற்றுள்ளது.  

   இதனை பிரதோஷ காலத்தில் கூறி பெண்கள் வழிப்பட்டு வந்தால் நல்ல கணவன் கிடைப்பான் என்றும், இப்பாடலை ஓதும் அனைவருக்கும் திருமகளின் அருள் கிடைக்கும்.

    அப்பாடல்….,
                ’’ உளத்திடை இவ்வாறு உன்னி
                   உவந்திலன் எனை என்றாலும்
                 களிப்புறும் யானே சென்று
                    கலப்பன் என்று ‘’அமலை’’ யாவும்
                 அளிப்பவன் அலங்கல் சூட்டி
                    அருமளை “” முதலி “’ மார்பின்
                 துளிப்பு யன் மணக்கு மின்னில்
                    தோய்ந்தனன் துயக்கு அற்றான்
                  
     ஏகாதசி திதியில் பாற்கடலைக் கடைய 
         துவாதசி திதியில் அமிர்தம் வெளிப்பட,
            திரயோசி திதியில் வெளிப்பட்ட, ஆலகால விஷத்தைச் 
                    சிவன் உண்ட நாள்.

அதுவும், கார்த்திகை மாதம் சனிக்கிழமையில் வரும் பிரதோஷம். சனிக்கிழமை  அன்றுதான் ஈசன் விஷமுண்ட தினம்.  அதனால். சனிக்கிழமை,  திரயோதசி திதியும்  சேர்ந்து வந்தால், அது மகாப் பிரதேஷம்.

  இரவும் பகலும் சந்திக்கின்ற நேரத்திற்கு “” உஷ்த் காலம் “ என்று பெயர். 
    பகலும் இரவும் சந்திக்கும் நேரம், “ பிரத்யுத் காலம் ” என்று பெயர். 

       இப்போது அது பேச்சு வழக்கில் “பிரதோஷம்’’ என அழைக்கப்படுகிறது.. பிரதோஷ வேளையை
“ ரஜனி முக வேளை ‘  என்றும் அழைப்பார்கள்.  இதற்கு இரவின் முகம் என்பது பொருளாகும். இது 
 பொழுது சாயும் நேரத்தில் வருவதால் “ சாயரட்சை ‘ என்பார்கள். 

      களைத்த உயிர்கள் அவளால் இரட்சிக்கப்படுகிறது. தோஷம் என்றால் குற்றமுடையது என்பது.

பிரதோஷம் என்றால் குற்றமில்லாததது எனப் பொருள்படும். எனவே இந்தப் பொழுதில் இறைவனை வழிபடுவதால் நம்முடைய தோஷம் நீங்கும் என்பது சான்றோர்கள் விளக்கம் கூறுவர்.

   சிவபெருமான் விஷம் அருந்திய பின் நடைபெற்ற நிகழ்ச்சிகளை ஆகமத் திரட்டு என்ற நூல் பட்டிலிட்டுக் காட்டுகிறது. அப்பாடல் :-

       பொங்கு கங்காதரன் காளம் அயின்றே ஒன்றும்
          புகலாமல் இருந்தனன் ஓர்கணப் பொழுது புலவோர்
       அங்கு அவனை இடைவிடாது அருச்சனை முன் புரிந்தார்
          அத்தியே ஏகாதசியம் அடுத்த திதியதனில்
       புங்கவர் பாரணம் புசித்தே பூர்த்திற்றார் இதன் மேல்
          பொருந்தும் திதியதனில் இமவான் பொற்கொடியிடை வைத்தே
       சங்கரன் சூல சுழற்றி நடித்தனன் ஓர்யாமம்
          சதுர்மறை நூலது பிரதோடம் எனவே சாற்று 
                                                                   ( -ஆகமத் திரட்டு- )
[ பொங்கும் புது வெள்ளமாகிய கங்கையைத் தலையில் அணிந்த கங்காதரனாகி, சிவபெருமான் விஷத்தை அருந்தி  பின் ஒன்றும் கூறாது ஒரு கணம் நேரம்அமைதியா இருந்தார்.அப்போது தேவர்கள் இடைவிடாது அர்ச்சனை புரிந்தனர். அந்த நாள் ஏகாதசி திதியாம்.

  பார்வதியை தனது இடபாகத்திலே வைத்து சூலத்தைச் சுழற்றி ஒரு சாம நேரம் நடன ஆடினார்.அதுவே நான்கு மறைகளும் கூறும் பிரதோஷம். ]

    சங்க இலக்கியங்களில், அதிகமான் ஒரு அபூர்வ நெல்லிக் கனியை தான் உண்பதைவிட தமிழ் மூதாட்டியான ஒளவை உண்டால் தமிழுக்கு நல்லது என்று எண்ணி உண்ணச் சொன்னான். பின்னாளில் இதனை அறிந்த ஒளவையார் அவன் தன்பால் கொண்டிருந்த அன்பினை போற்றி,

      “ நீலமணி மிடற்று ஒருவன் போல
          மன்னுக பெரும் நீயே ... என்று வாழ்த்தினார்.

  புறநாறூற்று கடவுள் வாழ்த்தில்,
        ‘’ கறைமிடற்று அணியலும், அணிந்தன்று
            அக்கறை பதினெண் ஏத்தவும் படுமே...  என்று குறிக்கப்பட்டுள்ளது.
 (  கழுத்தில் நீலவண்ணமாகிய விஷத்தை அணிந்தலும், அவ்வாறு அணிந்த நாளில் அவ்வண்ணத்தையும் அதன் காரணத்தையும் பதினெட்டு கணங்களால் போற்றி துதிக்கப்படுவது ) 
                      
பத்துப்பாட்டுள் ஒன்றான மலைபடுகடாம் எனும் நூலில்,
    நீரகம் பனிக்கும் அஞ்சுவரு
    கடுத்திறற் பேரிசை
    நவிரம் மேஎய் உறையும்
    காரியுண்டிக் கடவுளது இயற்கையும்
[ கடல் சூழ்ந்த உலகம் அஞ்சும் படியாகத் தோன்றும் நஞ்சினை உண்டு உலகினை காத்து ‘ நவிரம் ’ என்னும் மலையின் மீது விளங்கும் இறைவன் இயல்பை குறிக்கிறது ]

இது போன்ற எண்ணற்ற வகையில் 2000 ஆண்களுக்கு முற்பட்ட இலக்கியங்களில் விஷமுண்ட வரலாறு குறிக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம். பிற்கால பக்தி இலக்கியங்களிலும் பல்வேறு இடங்களில் விடமுண்ட வரலாறு விரிவாகக் காணப்படுகிறது.

சங்கம் மருவிய இலக்கியமான சிலப்பதிகாரத்தில்
    ” - விண்ணோர் அமுதுண்டும் சாவ ஒருவரும்
       உண்ணாத நஞ்சுண்டிருந்து அருள் செய்குவாய் --- “ என்று கூறுகிறது.
 ( கிடைக்கரிய அமுதத்தை உண்ட தேவர்களே இறந்து போயிருக்கிறார்கள். ஆனால், உண்டால் கண்டிப்பாக உயிரைப் போக்கக் கூடிய நஞ்சினை உண்ட பெருமான் நிலை பெற்றிருந்து அருள் புரிகிறார். )

  திருக்குறள் அனைத்துச் சமயங்களுக்கும் உரிய பொது மறையாகும். இதில் நேரயடியாக இல்லாமல் மறை முகமாகச் சில புராண வரலாறுகள் சுட்டப்படுகின்றன. அவற்றிலொன்று சிவபெருமான் நஞ்சு உண்ட வரலாறாகும்.
தேவர்கள் தாங்கள் உயிர் வாழ்வதற்காக அவருக்கு நஞ்சினை அளித்து அருந்தும்படி வேண்டினர். இறைவன் அதனை மறுத்திருக்கலாம். என்றாலும் நயத்தக்க நாகரீகமும் பண்பாடும் காக்க வேண்டி அதனை உண்டு
அவர்களைக் காத்து அருள்புரிந்தார். இந்த வரலாறே மறைமுகமாகத் திருக்குறளில்..,
           
               ’’ பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
                  நாகரீகம் வேண்டு  வர்..”
                                                      என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதோஷ மகிமை.
    பிறருடைய தோஷம், துன்பம், சிரமம், ஆகியவற்றை நீக்குவதால் சிவ ஆலயங்களில் சிறப்பாக பிரதோம் கொண்டாடப்படுகிறது.

      *  மூன்று பிரதோஷங்கள் தொடர்ச்சியாகப் பங்கு கொண்டு பார்த்தால் பிரம்மா விஷ்ணு ஆகியோரை ஒரு சேரப் பார்ப்பதற்கு சமம்
        
      *  ஐந்து பிரதோஷங்கள் தொடர்ச்சியாகப் பங்கு கொண்டு பார்த்தால் நோய்கள் குறைந்து, பிணிகளும் தீரும். 
      *  ஏழு பிரதோஷங்கள் தொடர்ச்சியாகப் பங்கு கொண்டு பார்த்தால் பெண்களுக்கு தடைப்பட்ட திருமணமும், திருமண யோகங்களும் நடைபெறும்.
       
      *  பதினொன்று பிரதோஷங்கள் தொடர்ச்சியாகப் பங்கு கொண்டு பார்த்தால் உடலும் மனமும் வலிமை பெறும்.

        இப்படி 108 பிரதோஷ பலன்கள் தொடரும்
             
 நன்றி மின்தமிழ்